பாட வகுப்புகள் நடத்துவதற்கான பற்றாக்குறையை போக்க சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக பள்ளி திறப்பு மேலும் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோடை வெயிலால் பள்ளி திறப்பு தாமதமானதால் ஒரு பாடத்துக்கு 4 மணி நேரம் பற்றாக்குறை நிலை உள்ளது. மாணவர்களுக்கு பாடச் சுமை இல்லாதவாறு சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறினார்.