தமிழகத்தில் வரும் ஆண்டுகளில் 15 ஆயிரம் டன் கோதுமையை தமிழக அரசே கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
இதுதொடர்பாக தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் 30 லட்சம் பேர் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தலா 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க 9 ஆயிரம் கிலோ லிட்டர் தேவைப்படுகிறது. மாநில அரசு கட்டுப்பாட்டில் மண்ணெண்ணெய் இருந்தால் வெளிச்சந்தையில் வாங்கித் தரலாம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 2020-ல் மாதந்தோறும் 13,885 டன் கோதுமை ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஜூன் முதல் 8,532 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. அரிசிக்குப் பதில் கோதுமை தர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்கின்றனர். தற்போது மாதம் 15 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மண்ணெண்ணெய் குறைப்பு குறித்து மத்திய அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளோம் என்று அவர் கூறினார்.