லிதுவேனியாவின் வில்னியஸ் நகருக்கு அருகே திங்கள்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் DHL சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் இருந்து வந்த இந்த விமானம், வில்னியஸ் சர்வதேச விமான நிலையத்தை அடைய 1.5 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது ஒரு வீட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் 31 வயதான போயிங் 737 ஆகும். இது ஸ்பெயினின் மாட்ரிட்டை தளமாகக் கொண்ட ஸ்விஃப்டேர் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்தது. விபத்து நடந்த நேரத்தில் வானிலை சரியாக இல்லை. உறைபனி வெப்பநிலை நிலவியதுடன், மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. விமான விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து DHL நிறுவனம் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிக்கையையும் வெளியிடவில்லை.














