மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நேற்று ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கல பதக்கம் வென்றார். ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். 13 - 5 என்ற புள்ளி கணக்கில் டேரியன் கிரசை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். இவருக்கு ஜனாதிபதி பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறுகையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இளம் மல்யுத்த வீரரான அவர் தனது முதல் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். எதிர்காலத்தில் அவர் பல பதக்கங்களை வெல்வார் என்று கூறினார். பிரதமர் மோடி இது குறித்து கூறுகையில், அவருடைய அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தெளிவாக தெரிகிறது. அவருடைய இந்த அற்புதமான சாதனையை இந்தியா கொண்டாடுகிறது என்று தெரிவித்தார்.














