பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்வது தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது.
அமெரிக்காவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்கின்றனர். தற்போது இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஃப்ரீ பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முகாம்கள் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இவர்கள் மனித சங்கிலி அமைத்து கோஷமிட்டனர். அதையடுத்து அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். நேற்று நடந்த இந்த நடவடிக்கையின்போது கூட்டத்தை கலைக்க போலீசார் மிளகாய் பொடி பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது.
இதேபோல் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முகாம்களை அமைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களையும் போலீசார் நேற்று அதிகாலை முகாம்களை விட்டு வெளியேற்றினர். இந்த சம்பவத்தின்போது சுமார் 125 தன்னார்வலர்கள் கைது செய்யப்பட்டனர். காசா போரில் இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது என்று பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேலுடனும் இஸ்ரேலுக்கு உதவும் நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றுவதை பல்கலைக்கழகங்கள் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்க மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். தற்போது இந்த போராட்டமானது ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.