துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு 2022-23-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் துணை மருத்துவ பட்டப்படிப்பு, மருந்தாளுநர்கள், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ ஆப்டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளுக்கு 121 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,526 இடங்கள் உள்ளன. அதேபோல் 348 சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 15,307 இடங்கள் இருக்கின்றன.
இந்த இடங்களுக்கு 2022-23-ம் கல்வியாண்டுக்கு 87,764 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதில், துணை மருத்துவப் படிப்புகளுக்கு 58,141 விண்ணப்பங்கள், மருந்தாளுநர் படிப்புக்கு 5,206 விண்ணப்பங்கள், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 12 ஆயிரத்து 478 விண்ணங்கள், டிப்ளமோ ஆப்டோமெட்ரி படிப்புக்கு 948 விண்ணப்பங்களும், பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புக்கு 7540 பேருக்கான விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை வரும் 21-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.