குடும்ப அட்டை ரத்து குறித்து கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் சிறிய அளவில் புதிதாக நெல் சேமிப்பு கிடங்கு 4.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தனியார் மயமாக்கப்படும் என்பது முற்றிலுமான வதந்தியாகும்.
மேலும் நுகர்பொருள் வாணிபக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். ரேஷன் பொருள் கடத்தல் சம்பந்தமாக இதுவரை 11 ஆயிரத்து 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 11.31 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.
அதோடு மூன்று மாதங்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்பது வதந்தி என்றும் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து வசிப்பவர்களுக்கும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் பேட்டியளித்தார்.