கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விரட்டியடிப்பதும், சிறைபிடிப்பதுமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 32 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் ஐந்து விசை படகுகளையும் சிறைபிடித்தது. பின்னர் இவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர்கள் அடையாள அட்டை அனைத்து ஆவணங்களையும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் மீனவர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டங்கள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது. அதன் படி இன்று மீன் பிடிக்க மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு ஐந்து நாட்களுக்கு பின்னர் கடலுக்கு சென்றுள்ளனர்.