மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து விதமான பைக் டாக்ஸி சேவைகளையும் நிறுத்துமாறு ராபிடோ நிறுவனத்திற்கு பாம்பே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராபிடோ நிறுவனம், சட்டவிரோதமாக பை டாக்ஸி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாக மாநில அரசு சார்பாக கடந்த டிசம்பர் 29ம் தேதி குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில், மாநிலத்தில் பைக் டாக்ஸி வர்த்தகத்தில் ஈடுபடத் தேவையான உரிமங்கள் மற்றும் முறையான ஆவணங்களை நிறுவனம் சமர்ப்பிக்க தவறியுள்ளதால் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராபிடோ நிறுவனம், இன்று மதியம் ஒரு மணி முதல் சேவைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இருசக்கர வாகனம் மூலம், பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டு சேவைகளையுமே நிறுவனம் நிறுத்தியுள்ளது. இந்த தடை ஜனவரி 20ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பை டாக்ஸி இயக்கம் குறித்த முறையான ஒழுங்குமுறைகளை வரையறுக்க மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.