வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆன கிராந்தி குமார் பாடி தலைமையில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றது. அதில் வாக்கு எண்ணிக்கையின் போது ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்ற தொகுதி தவிர வேறு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முகவர்கள் சென்று பார்வையிட முடியாது. ஒவ்வொரு மேஜைக்கு ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என்ற விகிதத்தில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வேட்பாளர்களால் நியமிக்கப்பட வேண்டும். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் இருந்து வாக்கு எண்ணிக்கையினை பார்வையிடலாம். செல்போன், ஐபேட், மணிக்கணினி அல்லது ஒலி அல்லது ஒளியை பதிவு செய்யத்தக்க எந்த ஒரு மின்னணு கருவியையும் வாக்கு எண்ணுகை மையத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது