ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, வருடாந்திர அளவிலான வருவாயில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 18951 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 28.01 ரூபாய் அளவுக்கு லாபம் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகவும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் உயர்வானதாகவும் உள்ளது. அதே சமயத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர அடிப்படையிலான நிகர லாபம் 69621 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 66702 கோடியாக இருந்தது. மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, இது வரலாற்று உச்சபட்ச வருடாந்திர வருவாய் ஆகும். மேலும், 10 லட்சம் கோடி டர்ன் ஓவர் பதிவு செய்த முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வரலாறு படைத்துள்ளது.