திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (12-ந்தேதி) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (வயது 30), மாரியம்மாள் (வயது 50), சீலம்பட்டி அம்பேத்கர் காலனியில் வசிக்கும் சுருளி (வயது 50), சுப்புலட்சுமி (வயது 45), திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் ராஜசேகர் (வயது 36), மற்றும் கோபிகா (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தின்போது பலர் தீவிர காயங்களுக்கு ஆளாகி, அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா ரூபாய் 3 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்குவதாகவும், தீவிர சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் மற்றும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெறுவோருக்கு ரூபாய் 50,000 உதவித்தொகை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.














