பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மனநோய், தூக்க மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று மருந்து கட்டுப்பாடு துறை அறிவுறுத்தியுள்ளது.
மனநோய் மற்றும் தூக்கமருந்துகள் தவறான பயன்பாட்டுக்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாடு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதில் சென்னை திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வலி நிவாரணி மருந்துகள் உரிய ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த மருந்துக் கடைக்கு வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
மேலும், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே அவற்றை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என்று அனைத்து மருந்து கடைகளுக்கும் தமிழக மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.














