இந்தியாவின் முதல் சூரிய எரிசக்தி நகரமாக சாஞ்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாஞ்சி நகரத்தின் வரலாறு கௌதம புத்தரின் காலம் தொட்டு பேசப்படுகிறது. இந்த நிலையில், சாஞ்சி மேலும் ஒரு வரலாற்று நகரமாக இடம் பிடித்துள்ளது. இந்தியாவின் முதல் சூரிய எரிசக்தி நகரமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், “ஒரு காலத்தில் கௌதம புத்தர் உலக மக்களை சாஞ்சி நகரம் நோக்கி திருப்பினார். அதன் பிறகு, இப்போது, மீண்டும் உலகத்தின் கவனம் சாஞ்சி நகரத்தை நோக்கி திரும்பி உள்ளது” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், சாஞ்சி, சூரிய எரிசக்தி பயன்பாட்டில் களமிறங்கியுள்ளது. தற்போதைய நிலையில், 3 மெகாவாட் சூரிய எரிசக்தி நிலையம், நகரத்தின் மொத்த எரிசக்தி சேவையை ஈடு செய்து வருகிறது. இந்த நிலையில், கூடுதலாக 5 மெகாவாட் சூரிய எரிசக்தி நிலையம் அமைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க வேளாண் பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தப்பட உள்ளது. இது தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் சூரிய எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.