சூரிய குடும்பத்தில், ஆறுகள், ஏரிகள், கடல்கள் உள்ள ஒரே கிரகம் பூமி மட்டுமல்ல. சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டன் கோளில் கடல் உள்ளது. ஆனால், இது நீரால் ஆனது அல்ல. ஈத்தேன், மீத்தேன் போன்ற ஹைட்ரோ கார்பனால் ஆனது. பூமியில் உள்ள மொத்த எண்ணெய் கிணறுகளின் அளவுடன் ஒப்பிடுகையில், நூற்றுக்கணக்கான மடங்கு அதிகமாக இங்கு ஹைட்ரோ கார்பன் உள்ளது. இந்த கடலில் பூமியில் உள்ள கடலை போலவே, அலைகள், நீரோட்டங்கள், ஜல சந்திகள், முகத்துவாரங்கள் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியாகி உள்ள ஆய்வறிக்கையில் டைட்டன் நிலவு கோளிலுள்ள கடல் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2004 முதல் 2017 வரை நாசாவின் காசினி திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.