பாரத ஸ்டேட் வங்கி, எஸ் வங்கியின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை பெற்றிருந்தது. எஸ் பேங்க் நிறுவனப் பங்குகளை விடுவிப்பதற்கான காலம் மார்ச் 6ஆம் தேதி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எஸ்பிஐ, எஸ் வங்கியில் நிரந்தரப் பங்குகளை வைத்திருக்க திட்டமிடவில்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக, பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக, எஸ் வங்கியின் 49% பங்குகளை, எஸ்பிஐ வைத்திருந்தது. அதன் பின்னர், பங்குகளை பல்வேறு கட்டங்களாக விடுவித்து, டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, 26.14% பங்குகளை வைத்திருந்தது. எஸ் வங்கியில் அதிக பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரராக எஸ்பிஐ தொடர்ந்து இருந்து வருகிறது. ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க், கோட்டக் மகேந்திரா வங்கி ஆகியவையும் எஸ் வங்கியில் பங்குதாரராக உள்ளது குறிப்பிடத்தக்கது.














