அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சொத்து வரியை நிர்ணயித்து வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மட்டும் சொத்து வரி நிர்ணயித்து அரையாண்டுக்கு ஒருமுறை வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள், நீர்வழித் தடங்களின் கரையோரம், நீர்நிலைகளின் அருகில், முன்பு நீர்நிலையாக இருந்து தற்போது முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கும் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அரசு நிலங்களை ஆக்கிரமித்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்குச் சொத்துவரி நிர்ணயம் செய்து வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கோரி அரசுக்குக் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அனுமதிகிடைத்ததும், மன்றத்தின் அனுமதி பெற்று செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.