பொதுவாக, சூரிய குடும்பத்தை சேர்ந்த பல கோள்கள் மற்றும் விண்கல்களுக்கு அதைச் சுற்றி வளையங்கள் காணப்படுவதுண்டு. இவை பனிக்கட்டிகள் மற்றும் இதர தாதுப் பொருட்களால் ஆனவையாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும், இவை கோள்களில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்குள் (ரோச்சி எல்லை வரம்புக்குள்) காணப்படும். இந்நிலையில், புதிய வளைய அமைப்பு ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது சூரிய குடும்பத்தில் காணப்படும் பொதுவான வளைவு அமைப்பை விட மாறுபட்டதாக உள்ளதால், பேசு பொருளாகியுள்ளது.
‘சயின்ஸ் அலர்ட்’ இதழில் வெளிவந்துள்ள அறிக்கையில், “புளூட்டோ கிரகத்திற்கு அப்பால், குயிப்பர் பெல்ட் பகுதியில், குவார் என்ற குறுங்கோள் உள்ளது. இந்தக் குறுங்கோளைச் சுற்றி அடர்ந்த வளையம் ஒன்று காணப்படுகிறது. ஆனால், இது கோளிலிருந்து வெகு தூரத்தில், அதாவது, ஒரு நிலவு அமையக்கூடிய தூரத்தில் காணப்படுகிறது. மேலும், ரோச்சி எல்லை வரம்பைத் தாண்டி அமைந்துள்ளது. இதனால், இதுவரை அறியப்படும் கோள்கள், நிலவுகள் மற்றும் வளையங்கள் குறித்த நமது ஆராய்ச்சியை மறு ஆய்வு செய்ய வேண்டி உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.