அழிந்துபோன டைனோசர்கள், பழங்கால மீன்கள் போன்ற உயிரினங்களை மீண்டும் உருவாக்க விஞ்ஞானிகள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு 'பேலியோ இன்ஸ்பைர்டு ரோபாட்டிக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அழிந்துபோன உயிரினங்களின் உடலமைப்பு மற்றும் இயக்கங்களை ரோபோக்கள் மூலம் மிகத் துல்லியமாக மீட்டெடுக்க முடியும். இதன் மூலம், பரிணாம வளர்ச்சி மற்றும் உயிரினங்களின் உடல் அமைப்பில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து ஆழமாக ஆராய முடியும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மைக்கேல் இஷிடா கூறுகையில், "இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு பொறியியல் நாளில் மில்லியன் கணக்கான ஆண்டுகளில் நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியை நாம் உருவகப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார். இதுவரை, விஞ்ஞானிகள் ஒரு உயிரினத்தை மட்டும் மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து வந்தனர். ஆனால், பேலியோ இன்ஸ்பைர்டு ரோபாட்டிக்ஸ் மூலம், பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த உயிரினங்களின் உடல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இதன் மூலம், அழிந்துபோன உயிரினங்கள் எவ்வாறு தங்கள் வாழ்விடத்திற்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொண்டன என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.