உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில் ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
தைவான் நாட்டை சேர்ந்த 'பவு சென்' கார்ப்பரேஷன் காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனம் உலக புகழ்பெற்ற காலணி நிறுவனங்களுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக விளங்குகிறது. 'பவு சென்' குழுமத்தை சேர்ந்த ஹை க்ளோரி புட்வேர் இந்தியா நிறுவனம், அடுத்த 12 ஆண்டுகளில், ரூ.2 ஆயிரத்து 302 கோடி முதலீடு மற்றும் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சிப்காட் உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில் காலணிகள் உற்பத்திக்கான ஆலை அமைக்க உள்ளது. இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசுக்கும், ஹை க்ளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் நிறுவனத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.