கனடா நாட்டில் நடைபெறும் நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர்.
காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய கமல் பிரீத் சிங், கரண் பிரீத் சிங் மற்றும் கோல்டிங் பிரார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கனடா எட்மண்டை சேர்ந்தவர்கள். கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று இவர்கள் சுர்ரே மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்பொழுது நீதிமன்றத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கையில் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்காக கூடுதலாக 50 இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் என்னவென்று என்பதை அறிந்து கொண்டதாக காணொளி காட்சி வழியாக கூறினர். நீதிமன்ற விசாரணைகள் ஆங்கிலத்தில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களுடைய வழக்கறிஞர்களிடம் பேசுவதற்கு நேரம் அளிப்பதற்காக இந்த வழக்கு மே 21 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே நீதிமன்றத்திற்கு வெளியே பிரிவினைக்கு ஆதரவாக பதாகைகளுடன் மற்றும் நிஜ்ஜார் கொலைக்கு தொடர்புடைய இந்திய அதிகாரிகளின் படங்களுடன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக கனடா மற்றும் இந்தியா இடையே கடந்த செப்டம்பர் மாதம் ராஜீய உறவு பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.














