2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது தொகுப்பு தங்க பத்திர வெளியீடு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி இது தொடர்பான செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று தொடங்கி, வரும் வெள்ளிக்கிழமை வரை, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்க பத்திரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த முறை, ஒரு கிராம் தங்கத்திற்கு 5923 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இந்த விலையில் தங்க பத்திரங்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது, குறைந்தபட்சம் ஒரு கிராம் மற்றும் அதிகபட்சம் 4 கிலோ வரையில் தங்கப் பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தனிநபர் அல்லாத நிறுவனங்கள், 20 கிலோ வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. தங்க பத்திரங்களுக்கு, ஆண்டொன்றுக்கு 2.5% வட்டி வழங்கப்படுகிறது. பத்திரங்களின் முதிர்வு காலத்தில், தங்கத்திற்கு ஈடான பணமாகவோ அல்லது தங்கமாகவோ பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய வழியில் தங்கப் பத்திரங்களை வாங்குபவர்களுக்கு கிராமுக்கு ரூ.50 சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் 5873 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.














