குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், அக்டோபர் மாதம் முதல் விமானிகளுக்கு 20% சம்பள உயர்வை அறிவித்துள்ளது. கடந்த வாரத்தில், அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 125 கோடி ரூபாய் நிதியை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. அதன் பின்னர், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. முன்னதாக, செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, தனது விமானிகளை மூன்று மாத காலத்திற்கு சம்பளம் இல்லா விடுப்பில் செல்லுமாறு இந்த நிறுவனம் அறிவித்திருந்தது. விமானங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமானிகளின் எண்ணிக்கையை கொண்டு வரவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்தது. இந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, 30 க்கும் மேற்பட்ட போயிங் 737 மேக்ஸ் விமானங்களை தரையிறக்க உள்ளதாக ஸ்பைஸ் ஜெட் அறிவித்தது. அதன்படி, நிறைய விமானிகளை பணி அமர்த்தியது. ஆனால், அந்த திட்டத்தை செயல்படுத்த காலதாமதம் ஆனதால், விமானிகளின் எண்ணிக்கை விமானங்களை விடவும் பெருமளவு கூடுதலாக மாறியது. எனவே, விமானிகளை விடுப்பில் செல்லுமாறு ஸ்பைஸ் ஜெட் அறிவுறுத்தியிருந்தது. தற்போது, ஸ்பைஸ் ஜெட் தரப்பில் இருந்து, “விரைவில் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்க உள்ளோம். எனவே, விடுப்பில் செல்லும் விமானிகளை நாங்கள் திருப்பி அழைத்துக் கொள்வோம் என்று உத்தரவாதம் தருகிறோம். மேலும், விடுப்பு காலத்தில், விமானிகளுக்கு இழப்பீடு, பயணக் காப்பீடு உள்ளிட்ட இதர பணியாளர் நலத்திட்டங்கள் செல்லுபடி ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் இந்தியாவின் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் டிஜிசிஏ, ஸ்பைஸ் ஜெட் விமான இயக்கத்திற்கு அக்டோபர் 29ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்காக, 50% ஸ்பைஸ் ஜெட் விமான இயக்கத்திற்கு மட்டுமே ஜூலை மாதத்தில், டிஜிசிஏ அனுமதி வழங்கியிருந்தது. அதன்பின்னர், பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதால், தற்போது, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.