இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அணியாத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் அபராதம் விதிப்பது போல, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
தலைக்கவசம் அணியாமல் பணிக்கு வரும் போலீசாரிடம் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், தலைக்கவசம் வாங்கி வந்து காண்பித்த பின்னரே, வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தலைக்கவசம் அணியாமல் பணிக்கு வரும் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.