மெல்போர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பூமிக்கு ஒரு காலத்தில் சனி கிரகத்தைப் போன்ற வளையங்கள் இருந்திருக்கலாம் என்ற அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வின்படி, சுமார் 466 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைச் சுற்றி ஒரு பெரிய குப்பை வளையம் இருந்திருக்கலாம். இது பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கலாம் என்றும், அது பூமியின் காலநிலையை கணிசமாக பாதித்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் பூமியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளங்களைக் கணக்கெடுத்து ஆய்வு செய்தனர். அவர்களின் ஆய்வில், அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட பள்ளிகள் அனைத்தும் பூமத்திய ரேகைக்கு அருகில் குவிந்து காணப்பட்டன. இது ஒரு பெரிய விண்கல் பூமியை நெருங்கியதால் ஏற்பட்ட ஈர்ப்பு விசையின் காரணமாக உடைந்து, பூமியைச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கியிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். மில்லியன் கணக்கான ஆண்டுகளில் இந்த வளையத்தின் துண்டுகள் படிப்படியாக பூமியில் விழுந்தன. இந்த ஆய்வு, பூமியின் பரிணாம வரலாற்றில் பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.