அதிமுக ஆட்சியில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.78 கோடியில் தரமற்ற முறையில் கட்டடம் கட்டப்பட்டிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் முதியோர் நல மருத்துவ மைய கட்டிடம் கட்டுவதற்காக 2016ல் ஆணை வழங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு கட்டிடம் தரமற்ற முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கட்டிடம் கொரோனா வார்டாக பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தின் சுவர்கள் கை வைத்தால் உதிரும் அளவுக்கு மோசமாகி உள்ளது என்றார்.
இதனால் நோயாளிகள் அச்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதன்படி, தலைமை பொறியாளர் மற்றும் பணியாளர்களை அனுப்பி கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எம் சாண்ட் மூலம் பூச்சு வேலை செய்யும்போது முறையான ரசாயன கலவை பயன்படுத்தவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கட்டிட ஒப்பந்ததாரர் பெரியசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் முதலில் . முறையாக பணியை மேற்கொண்டோம் என்றார். தற்போது தாமாக முறைப்பாட்டை சரிசெய்ய முன்வந்துள்ளார் என அமைச்சர் தெரிவித்தார்.










