நேற்று முன் தினம், சூடானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், 22 பேர் பலியான சம்பவம், அங்கு மீண்டும் உள்நாட்டு போர் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளது. ஐநா சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் இதனை தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல், சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே அதிகாரப் போட்டி காரணமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் பொருட்டு நடந்த வன்முறையில் பொதுமக்கள் 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக சூடானில் அமைதி நிலவி வந்த நிலையில், இந்த தாக்குதல் மூலம் மீண்டும் உள்நாட்டு போர் முழு அளவில் நேர்வதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளதாக ஐநா சபை எச்சரித்துள்ளது. மேலும், வன்முறை சம்பவங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், சூடானில் பதற்றம் நிலவுகிறது.














