அயோத்தியில் ராமர் கோவில் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி செய்துவருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 110 ஏக்கரில் சுமார் ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி இதற்காக அடிக்கல் நாட்டினார். 50 சதவீத வேலைகள் முடிந்து விட்டது. அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் மகரசங்கராந்தியின் போது கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் ராமர் கோவிலை தற்கொலை படை தாக்குதல் மூலம் தகர்க்க சதி செய்துள்ளதாகவும் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.