இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் சிரியா நாட்டு ராணுவ வீரர்கள் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் சிரியா நாட்டு ராணுவ வீரர்கள் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். சிரியாவின் கோலன் குன்றுகள் பகுதி இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ளது. அங்கு நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். இஸ்ரேல் அனுப்பிய ஏவுகணைகளில் சிலவற்றை சிரியா விமானப்படையை சேர்ந்தவர்கள் அழித்ததாக அந்நாட்டு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் சிரியா தலைநகர் டமாஸ்கசுக்கு வடகிழக்கில் உள்ள காலாமௌன் எனும் மலைப்பகுதியில் செயல்படுகின்றனர். இந்தப் பகுதியில் இருந்த இரண்டு ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
காசா போரில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இஸ்ரேல், லெபனான் இடையே எல்லையில் மோதல் நடைபெறுகிறது. அதோடு சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் சிரியாவின் மீது இஸ்ரேல் சுமார் 24 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள், ஈரான் துணை ராணுவ படையை சேர்ந்தவர்கள், குடிமக்கள் என மொத்தம் 43 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஐந்து மாதங்களில் லெபனானை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் சில தாக்குதல்கள் சிரியாவை இலக்காக கொண்டு நடத்தப்பட்டதாக கடந்த வாரம் இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்டது.