தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற தமிழகம், புதுவை அரசுகளுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கும் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானது. அதன் அடிப்படையில், தானாக முன்வந்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக இறால் பண்ணைகள் கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிகளை பின்பற்றி இயங்குகிறதா என்பது குறித்து கடலோர மீன்வளர்ப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தனர்.
உத்தரவின் படி அந்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்குள் இயங்கும் இறால் பண்ணைகள் கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்பது போல, கடலோர மீன் வளர்ப்பு ஆணையத்திடமும் அனுமதி பெற வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மேலும், கடலோரத்திலிருந்து 200 மீட்டருக்குள் இயங்கும் இறால் பண்ணைகளை அப்புறப்படுத்த கடலோர மீன் வளர்ப்பு ஆணையத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது
இதுவரை சட்ட விரோதமாக இறால் பண்ணை நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி, அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளுக்குட்பட்டு செயல்படும் இறால் பண்ணைகள் தொடர்ந்து செயல்பட தடை எதுவும் இல்லை எனவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.