மதுரை தமுக்கம் மைதானத்தில் வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா 2024 நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் 80-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டு புத்தொழில் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசுவார்கள். 150-க்கும் மேற்பட்ட அரங்குகளை கொண்ட புத்தொழில் கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திருவிழாவில் வெப் 3 (மெட்டாவெர்ஸ்) எக்ஸ்பீரியன்ஸ் அரங்கும் இடம்பெறும். இதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் புதுமையான தயாரிப்புகளை நேரடியாக விளக்கிக் காட்டுவார்கள். நிறைவு நாளான 29 ஆம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.