தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற்சங்கங்கள் நாளை அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
மத்திய அரசுக்கு எதிராக நாளை அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சில தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு ஆதரவாக ஒவ்வொரு மாநிலத்திலும் தொழிற்சங்கங்கள் சேர்ந்து மறியல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் சென்னையில் உள்ள அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடைபெற உள்ளதாகவும், இதில் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாகவும் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. போராட்டத்தில் போக்குவரத்து கழக டிரைவர்,கண்டக்டர்களும் கலந்து கொள்வார்கள் என தெரியவந்துள்ளது .இதனால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் டிரைவர் கண்டக்டர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் கட்டாயம் பணிக்கு வரவேண்டும். தொழிலாளர்களுக்கு 16ஆம் தேதி வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வு உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். அவ்வாறு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














