நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 5 மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி, விமலா என்பவருக்கு சொந்தமான ஒரு படகில் 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் தலையில் காயமடைந்த அன்பழகன் உள்ளிட்ட 5 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, அன்பழகன் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 4 மீனவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














