மேற்கு வங்க மாநிலத்தின் சிங்குர் பகுதியில், டாடா நேனோ ஆலை அமைப்பது தொடர்பாக டாடா மோட்டார்ஸ் மற்றும் மேற்குவங்க அரசு இடையே சர்ச்சை நிலவி வந்தது. கடந்த 2006 ம் ஆண்டு, ஆலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தில், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி, மம்தா பானர்ஜி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அதன் பின்னர், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் நிலத்தை விட்டுவிட்டு குஜராத்தில் ஆலையை அமைத்து விட்டது. ஆனால், இது தொடர்பான வழக்கு விசாரணை அப்போது முதல் நடந்து வருகிறது.நிலத்திற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிக முதலீடு செய்துள்ளதாகவும், அதற்காக மேற்குவங்க அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இறுதியாக, 3 பேர் கொண்ட நடுவர் மன்ற அவைக்கு வழக்கு வந்தடைந்தது. இதில், மேற்குவங்க அரசு 766 கோடி இழப்பீட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒருமனதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிலத்தின் முதலீட்டு தொகையுடன் சேர்த்து வட்டி தொகையாக 766 கோடி ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.