டாடா குழுமத்தின் பகுதியாக ஜாகுவார் லேண்ட்ரோவர் வாகன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைவேந்தராக உள்ள ராஜன் அம்பா, ஜாகுவார் லேண்ட்ரோவர் வர்த்தகத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மார்ச் 1ம் தேதி முதல், அவர் தனது புதிய பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக பயணிகள் வாகனப் பிரிவில், ராஜன் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு முன்னதாக, அவர், டைட்டன் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனமான காரட்லேன் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக பணியாற்றி வந்தார். மேலும், அவர், டைட்டன் மற்றும் தனிஷ்க் நிறுவனங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முன்னதாக, ஜாகுவார் லேண்ட்ரோவர் தலைமைப் பொறுப்பில் இருந்த ரோஹித் சூரியின் பதவிக்காலம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்ததால், புதிய தலைமை அதிகாரி நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.