ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க மார்ச் 20 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறுபான்மையினர் நலத்துறை செயலர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை மார்ச் 20 வரை இந்திய ஹஜ் குழு நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாகவோ, மும்பை இந்திய ஹஜ் குழுவின் ‘ஹெச்சிஓஎல்’ என்ற செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலமோ விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் மார்ச் 20-ம் தேதி அல்லது அதற்கு முன் வழங்கப்பட்டு குறைந்தது அடுத்த ஆண்டு பிப்.3-ம் தேதி வரை செல்லத்தக்க, இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசிபக்கம், குழு தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது ஐஎப்எஸ்சி குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல், முகவரி சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இந்திய ஹஜ் குழு இணையதள முகவரியை பார்க்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.














