ட்விட்டர் தளத்திற்கு போட்டியாக, மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் நிறுவனம், த்ரேட்ஸ் என்ற புதிய தளத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக, கடந்த மாதம் செய்தி வெளிவந்தது. தற்போது, வரும் ஜூலை 6 ஆம் தேதி, இன்ஸ்டாகிராமின் த்ரேட்ஸ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து, பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. ட்விட்டர் தளத்திற்கு அதிக விமர்சனங்களும் எழுந்துள்ளன. எனவே, ட்விட்டருக்கு போட்டியாக பல்வேறு தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள், ட்விட்டர் முன்னாள் தலைவர் ஜாக் டோர்சி உருவாக்கிய ப்ளூ ஸ்கை, மக்கள் மத்தியில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது தவிர, இந்தியாவின் கூ செயலி மற்றும் ஸ்பில் ஆகிய தளங்கள் ட்விட்டருக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், மெட்டா நிறுவனத்தின் த்ரேட்ஸ் அறிமுகம் மக்கள் கவனத்தை பெற்றுள்ளது. இதுவும் ட்விட்டரை போலவே எழுத்து பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தளத்தில் தனிநபர் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்பது போல ஜாக் டோர்சி மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் தெரிவித்துள்ளது இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.