டைட்டன் நிறுவனத்தின் 4ம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, கடந்த மார்ச் மாத இறுதியில், நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் 50% உயர்ந்து, 734 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 33% உயர்ந்து, 9704 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் உயர்ந்துள்ளதால், நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு, 10 ரூபாய் டிவிடெண்ட் வழங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
டைட்டன் நிறுவனத்தின் வரிக்கு முன்னான வருவாய் 37% உயர்ந்து, 1053 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், துறை வாரியாக கணக்கிட்டால், நகை வர்த்தகத்தில் 24% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. நகை வர்த்தக வருவாய் 7576 கோடி அளவில் பதிவாகியுள்ளது. அதே வேளையில், திருமணம் சார்ந்த பொருட்கள் வர்த்தகத்தில் நிறுவனத்தின் வரிக்கு முன்னான வருவாய் 997 கோடியாக உயர்ந்துள்ளது. முக்கியமாக, டைட்டன் நிறுவனத்தின் கடிகார வர்த்தகம் 40% உயர்வை பதிவு செய்து, 871 கோடி அளவில் வருவாயை பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த காலாண்டில், இந்தியாவின் முன்னணி 5 ஸ்மார்ட் வாட்ச் நிறுவனங்களுள் ஒன்றாக டைட்டன் இடம் பிடித்துள்ளது. இறுதியாக, டைட்டன் நிறுவனத்தின் கண்ணாடிகள் வர்த்தகம் 25% உயர்ந்து, 165 கோடி அளவில் வருவாய் உயர்வை பதிவு செய்துள்ளது.