மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்துடன் திண்டுக்கலை வீழ்த்தி, திருப்பூர் தமிழன்ஸ் அணி 9வது டி.என்.பி.எல். கோப்பையை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
திண்டுக்கல் நத்தத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ், 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. துஷர் ரஹாஜே 77, அமித் சாத்விக் 65 ரன்கள் எடுத்தனர். பதிலுக்கு களமிறங்கிய திண்டுக்கல் அணி, தொடக்கத்திலேயே முக்கிய வீரர்களை இழந்து தடுமாறியது. திருப்பூர் அணியின் தீவிர பந்துவீச்சு அணி முழுவதையும் 14.4 ஓவரில் 102 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி அபார வெற்றி பெற்று, டி.என்.பி.எல். 2025 கோப்பையை தங்கள் வசப்படுத்தியது.














