2025-26 நிதியாண்டிற்கான தேர்வுத் திட்டத்தின் கீழ் 645 அரசு பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IIக்கு ஆன்லைனில் விண்ணப்பம் துவங்கியுள்ளது, தேர்வு செப்டம்பர் 28 அன்று நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 15) முதல் ஆகஸ்ட் 13 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணம் UPI வாயிலாக செலுத்த இயலும். இத்தேர்வு அறிவிப்பை ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட தேதி தவறாது வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி IIA) தேர்வுக்கு எளிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் முதன்முறையாக 2 ஆண்டுகளாக தொடர்ந்து அறிவிப்பு வெளியானது என்பது சிறப்பம்சம். 645 காலியிடங்கள் தோராயமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவைப்பட்டால் இடங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.














