தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் 88 கோவில்களை பராமரிக்க ரூ.3 கோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தில் 88 ஒருங்கிணைந்த கோவில்களின் நிர்வாகமானது பரம்பரை அறங்காவலர், உதவி ஆணையர்/ பொருளாளர் மற்றும் மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்துடன் இணைந்துள்ள 88 கோவில்களில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், தாராசுரம் உள்ளிட்ட 8 முக்கிய கோவில்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது.
முதன்மையாக வருவாய் வரப்பெறும் தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் புன்னைநல்லூர், மாரியம்மன் கோவில்களின் வருவாயை கொண்டே இதர கோவில்களின் நிர்வாகம் நிதி பற்றாக்குறையுடன் தற்போது மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. இந்நிதிப் பற்றாக்குறையை போக்கிடும் வகையில் அரசு மானியமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் 3 கோடி ரூபாயை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.














