தமிழக அமைச்சரவை 2-வது முறையாக மாற்றப்படுகிறது. கவர்னர் மாளிகையில் நாளை காலை நடைபெறும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கிறார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலினும், 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையில் துறைகள் மாற்றம் நடைபெற்றது. எனினும், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை.இந்நிலையில், திமுக உட்கட்சித் தேர்தல்கள் முடிந்து, இளைஞரணிச் செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வானார்.
இந்நிலையில், உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்து ஆளுநர் மாளிகைக்குப் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இதையடுத்து, உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகியவை ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.