இந்திய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில், பாஸ்டேக் மூலம் பெறப்பட்ட சுங்க கட்டணம் 46% உயர்ந்துள்ளதாக நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில், பாஸ்டேக் சுங்க கட்டணம் வசூல் 50855 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், சராசரியாக ஒரு நாள் பாஸ்டேக் சுங்க கட்டண வசூல் 134.44 கோடியாக பதிவாகியுள்ளது. அத்துடன், கடந்த டிசம்பர் 24ஆம் தேதி, உச்சபட்சமாக ஒரே நாளில் 144.19 கோடி ரூபாய் சுங்க கட்டணம் வசூலாகி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெடுஞ்சாலை துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பாஸ்டேக் மூலம் வசூலாகும் சுங்க கட்டணத்தின் எண்ணிக்கையிலும் 48% உயர்வு பதிவாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், 219 கோடி என்ற அளவில் இருந்த பாஸ்டேக் பரிமாற்றங்கள் 2022 ஆம் ஆண்டில் 324 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரையில் மொத்தமாக 6.4 கோடி ஃபாஸ்டேக் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்டேக் அம்சம் கொடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை 922 இல் இருந்து 1181 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 323 மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.