ஐரோப்பிய நாடான செக் குடியரசில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செக் குடியரசில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாய கொள்கைகளை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் செய்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 நாடுகள் ஒன்றிணைந்து பசுமை கொள்கை ஒன்றை கொண்டு வந்துள்ளன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பசுமை கொள்கையானது வேதிப்பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து வைக்கிறது. இந்த கொள்கையின்படி விவசாயிகளுக்கு நிதி சுமை அதிகரிக்கும். இதனால் வேளாண் பொருட்களின் விலை ஏறும் என்பதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்திற்கு உடன்பட்டுள்ளது. எனவே அந்நாட்டு விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் அரசை கலைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.
செக் தலைநகர் பிரேக் நகரின் சாலைகளில்விவசாயிகள் டிராக்டர்களை அணிவகுத்து போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டின் வேளாண் அமைச்சர் மாலிக் வைபோர்னியிடம் கோரிக்கை கடிதத்தையும் வழங்க உள்ளனர். அதோடு வியாழன் அன்றும் விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் அண்டை நாடுகளின் விவசாய அமைப்புகளும் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.