ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நகியான், தனது மகன் ஷேக் காலித் -ஐ அபுதாபியின் பட்டத்து இளவரசராக அறிவித்துள்ளார். மேலும், தனது சகோதரர் ஷேக் மன்சூர் பின் சையத் அல் நகியான் -ஐ அமீரகத்தின் துணை அதிபராக நியமித்துள்ளார். அவர் தவிர்த்து, துபாய் வேந்தரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துணை அதிபராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, அவரது சகோதரர்களான ஷேக் தன்னூன் பின் சையத் அல் நகியான் மற்றும் ஹஸ்ஸா பின் சையத் அல் நகியான் ஆகியோர் துணை ஆட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத், கடந்த மே மாதம் ஆட்சியில் அமர்ந்தார். முன்னதாக, அவர் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், பல ஆண்டுகளாக ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளை அணிதிரட்டுவதில் முக்கிய பங்காற்றி வந்தார். மேலும், அமீரகத்தை உலகின் பணக்கார பிராந்தியமாக மாற்றியதில் இவரது பங்கு அதிகம். இந்நிலையில், அவரது தலைமையில், அவரது குடும்பத்தினர் ஆட்சி அமைய உள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று கருதப்படுகிறது.