டெல்லியில் ஊபர் நிறுவனத்தின் ஷட்டில் சேவைக்கு அனுமதி கிடைத்துள்ளது. டெல்லி பிரீமியம் பேருந்து திட்டத்தின் கீழ் டெல்லி போக்குவரத்து துறை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி, டெல்லியில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை ஊபர் நிறுவனம் இயக்க உள்ளது.
ஊபர் நிறுவனத்தின் ஷட்டில் வாகனத்தில் பயணிப்பதற்கு, ஊபர் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். ஒரு வாரத்திற்கு முன்னரே முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் பேருந்து பயணிக்கும் வழித்தடம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் வசதி செயலியில் கொடுக்கப்படுகிறது. மேலும், ஊபர் செயலி மூலம் பேருந்தின் லைவ் லொகேஷனை தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே, கொல்கத்தாவில் ஊபர் ஷட்டில் சேவை பயன்பாட்டில் இருக்கும் சூழலில், டெல்லியில் புதிதாக தொடங்கப்படுகிறது. ஊபர் நிறுவனத்தின் ஷட்டில் பேருந்தில் 19 முதல் 50 பயணிகள் வரை பயணிக்க முடியும்.