பிரிட்டன் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரம் அடைந்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களது ஒரு வேளை உணவை தவிர்க்கும் அளவுக்கு நடப்பு மாதத்தில் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது. இந்நிலையில், இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க முடியாமல் பிரிட்டன் அரசு தவித்து வருகிறது. உச்சபட்சமாக, பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்துள்ளார். மேலும், நாட்டின் புதிய பிரதமர் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிஸ் ட்ரஸ் இது குறித்து கூறும் பொழுது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் இந்த ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், அவரது ராஜினாமா குறித்து மன்னர் சார்லஸுக்கு அறிவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது. இதன் காரணமாக, பிரிட்டன் நாட்டின் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக நேரிட்டது. அதன் பின்னர், கன்சர்வேட்டிவ் கட்சியின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ் கடந்த மாதம் பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். நாட்டின் பொருளாதார நிலையை சீரமைக்கும் வகையில் அவரது ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் அவரது தேர்தல் வாக்குறுதிகளும் அமைந்தன.
ஆனால், அவர் அறிமுகப்படுத்திய வரிச்சலுகைகளால் பொருளாதார நிலை மேம்பட வில்லை. மாறாக, அவரது ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் மேலும் மோசம் அடைந்தது. அவரது தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாட்டிற்கு புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்பட்டார். அத்துடன், தனது தவறான பொருளாதார கொள்கைகளுக்காக பிரதமர் லிஸ் ட்ரஸ் அண்மையில் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், லிஸ் டிரஸ்சுக்கு எதிராக கன்சர்வேட்டிக் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சூயல்லா பிராவர்மன், லிஸ் ட்ரஸ் தலைமையின் கீழ் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். அவர், "மக்களுக்கு ஆதரவாக அரசாங்கம் செயல்பட வேண்டும். சில சுயநலவாதிகளின் நன்மைகளுக்காக செயல்படக்கூடாது" என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த வெண்டி மார்டன், கிரைக் வொயிட்னர் ஆகியோர் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தற்போது, இடைக்கால பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பு வகித்து வரும் நிலையில், விரைவில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு நபர் பிரதமராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியினர், "கன்சர்வேடிவ் கட்சியால் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியவில்லை. எனவே, புதிதாக அதே கட்சியை சேர்ந்த மற்றொரு நபருக்கு பதவி வழங்கப்பட்டாலும், பொருளாதார நிலையில் மாற்றம் நிகழாது. எனவே, பொதுத் தேர்தலை அறிவித்து, அதன் மூலம் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.