கேரளாவின் திருச்சூர், நிலாம்பூர் மற்றும் தெலுங்கானாவின் வாரங்கல் ஆகிய நகரங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, பல்வேறு நாடுகளில் உள்ள நீண்ட கால கற்றல் முறையை ஊக்குவித்து வருகிறது. அவ்வாறு அதில் சிறப்பாக செயல்படும் நகரங்களை அங்கீகரித்து வருகிறது. இவ்வாறு அங்கீகரிக்கப்படும் நகரங்கள் சர்வதேச அளவிலான கற்றல் நகரங்களின் பட்டியலில் இணைக்கப்படுகின்றன.
தற்போது இந்தப் பட்டியலில், 44 நாடுகளைச் சேர்ந்த 77 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியாவிலிருந்து தெலுங்கானாவின் வாரங்கல், கேரளாவின் திருச்சூர், நிலாம்பூர் ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பட்டியலில் உக்ரைன் தலைநகர் கீவ், தென் ஆப்ரிக்காவின் டர்பன், ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜா ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து யுனெஸ்கோ இயக்குனர் ஆட்ரி அசோலே கூறுகையில், உலகின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் நகரங்களில் வசிக்கின்றனர். கற்பித்தல் தொடர்பான நடவடிக்கைகளை நீண்ட காலம் தொடர்ந்து மேற்கொள்வதில் நகரங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே, கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் நகரங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.