குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை அரசாங்கம் கொள்முதல் செய்யும் அடிப்படை விலை ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ எனப்படுகிறது. தற்போதைய நிலையில், 23 கரீப் மற்றும் குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசாங்கம் நிர்ணயிக்கிறது.
அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2022 ஆம் ஆண்டு விளைவிக்கப்பட்டு, 2023-24 ஆம் ஆண்டில் வர்த்தகம் செய்யப்படும் ஆறு குருவைப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படுகிறது. குறிப்பாக, மசூர் பருப்பின் விலை ஒரு குவிண்டாலுக்கு 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கடுகு மற்றும் பலாக்கொட்டை ஆகியவற்றின் ஆதரவு விலை குவிண்டாலுக்கு 400 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் 110 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை 2125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கோதுமை உற்பத்தி செய்வதற்கான தொகை குவிண்டாலுக்கு 1065 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விலை உயர்வு அறிவிப்பு விவசாயிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.