உத்தரப் பிரதேச அரசின் 2025-26 நிதியாண்டுக்கான ரூ.8,08,736 கோடி மதிப்பிலான பட்ஜெட்டில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், அயோத்தியில் ரூ.150 கோடி, மதுராவில் ரூ.125 கோடி, நைமிசாரண்யாவில் ரூ.100 கோடி, சித்ரகூடத்தில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முக்கிய நெடுஞ்சாலைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஆன்மிக சுற்றுலா வளர்ச்சிக்காக மொத்தம் ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி (13%), வேளாண்மை (11%), சுகாதாரம் (6%) உள்ளிட்ட துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கோயில் கட்டுமானத்திற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. மதுரா-பிருந்தாவனம் வழித்தடத்தில் ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் கட்ட ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் நிலம் கையகப்படுத்த ரூ.200 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் ‘சநாதன கலாசாரத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டதாக’ முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.














